புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பதவியேற்றுகொண்ட கைலாஷ்நாதன்: டிவிட்டர் கணக்கை அப்டேட் செய்யாத அதிகாரிகள்…

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியின் பதவி காலம் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், புதுச்சேரிக்கு தனி துணைநிலை ஆளுநர் நியமிக்காமல் அப்போது தெலுங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. 3 ஆண்டுகள் அவர் துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்ட நிலையில், அவர் நான்கு மாதங்கள் துணைநிலை ஆளுநர் பொறுப்புகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்தார். அதில் மூன்றறை ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரிக்கென்று தனி துணைநிலை ஆளுநராக குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கே. கைலாஷ்நாதனை நியமனம் செய்தார்.
மேலும் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிஷ்ணன் மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றப்பட்ட நிலையில் அவர் கடந்த 31 ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து விடைபெற்றார்.

இந்த நிலையில் புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றுகொண்டார்.
புதுச்சேரியின் 33வது துணைநிலை ஆளுநராக பதவியேற்றுகொண்ட கைலாஷ்நாதனுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் புதிதாக பதவியேற்றுகொண்ட துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குறித்த தகவல்கள் எதுவும் அப்டேட் செய்யப்படவில்லை. ஏற்கனவே துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்த சி.பி ராதாகிருஷ்ணன் தகவல்கள் மட்டுமே உள்ளது.