புதுச்சேரியில் மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய மதுபானக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 8 வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்வி பதில் நேரத்தில், புதுச்சேரியில் கோவில், மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டுமென ஆளும் கட்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் கேள்விக்கு முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் பதில் அளித்து பேசுகையில், புதுச்சேரியில் புதிய மதுபானக் கொள்கை கொண்டு வருதற்கு அரசு தயாராக உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தினால், மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய மதுபான கடைகளுக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளிக்கிறது. புதுச்சேரிக்கு வருவாய் மதுபானக் கடைகள் மூலம்தான் வருகிறது. பெங்களூரில் இரவு 1 மணி வரை மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மற்றும் சாராயக் கடைகள் மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு, புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்து, சபையில் தவறான தகவல்களை பதிவிட கூடாது என தெரிவித்தனர். மேலும் புதுச்சேரியில் விற்கப்படும் சாராயம் தரமாகதான் விற்கப்பட்டு வருகிறது என தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி செல்வதை தடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.