பதவியை துறந்து தேர்தலை சந்தியுங்கள் உங்களை தோற்கடிக்க நாங்கள் தயார்… ஆளுநர் தமிழிசைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா சவால்

புதுச்சேரி திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசியதாவது:-

தமிழ் மொழிக்காக தன்னுயிர் நீத்த தியாக மறவர்களின் வரலாற்றை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திமுக கேட்கும் கேள்விகளுக்கு சிரித்துக்கொண்டே வேறு ஒரு பதிலை அளிக்கிறார். ஆனால் நாம் கேட்கும் கேள்விக்கு பதிலிப்பதில்லை. முதல்வரும் அதே நிலையில் பதில் அளித்திருக்கிறார். முதல்வர் பாஜக–வுக்கு ஆதிரவாக இருக்கிறாரா? அல்லது நடிக்கிறாரா? அவரின் முகம் தெரியவில்லை. தேர்தலுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறாரா? எது எப்படியோ பாராளுமன்றத் தேர்தலில் பாஜக–என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தோல்வி உறுதி.
ஜிப்மர் இயக்குநரின் செயல்பாட்டால் ஊழியர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதையும், பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு கட்டண முறையை கண்டித்தும், இந்தி திணிப்பை எதிர்த்தும், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினோம். ஆனால் இயக்குநருக்கு ஆதரவாக ஆளுநர் செயல்பட்டார்.

சேதராப்பட்டில் புதுச்சேரி அரசு இலவசமாக கொடுக்கப்பட்ட இடத்தில் ரூ. 500 கோடி மதிப்பில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கென மருத்துவமனை கட்டும் திட்டத்தை முடக்கியது மட்டுமல்லாமல், ஜிப்மர் ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஜிப்மர் இயக்குநரின் பணிகாலத்தை ஒன்றிய அரசு பல்வேறு எதிர்ப்புகளிடையே இரண்டாது முறையாக நீட்டிப்பு செய்திருப்பது கண்டிக்கத்தக்கதும், ஜிப்மர் விதி 2008க்கு எதிரானதும் ஆகும்.
புதுச்சேரியில் மூடிவிட்டு செல்லும் தொழிற்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாரதி, சுதேசி, ஸ்பின்னிங் மில்களை போய் ஆய்வு செய்யுங்கள் என்றால் ஆளுநர் செல்ல மாட்டார். ஜிப்மரில் ஒரு பிரச்சனை என்று சொன்னால் முதல் ஆளாய் நின்று பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆகவே, ஜிப்மர் இயக்குநர் இரண்டாவது முறையாக பணிநீட்டிப்பு செய்ததற்கு என்ன காரணம் என்று ஆளுநர் பதிலிளிக்க வேண்டும்.
அண்டை மாநிலமான தமிழகத்தில் கோர விபத்து, தீ விபத்து, நீரில் மூழ்கி இறப்பவர்களுக்கு முதல்வர் நிவராண நிதி உதவி அளித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அதே நிலையை புதுச்சேரி முதல்வரும் பின்பற்றி கடந்த ஓராண்டில் கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் ரங்கசாமியால், இந்த மூன்று ஆண்டில் யாதாவது ஒரு திட்டத்தை கொண்டுவர முடிந்ததா என்றால் இல்லை. சென்னை – புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை இரயில்வே திட்டம், துறைமுக விரிவாக்கத் திட்டம், சுற்றுலா வளர்ச்சி, நலிவடைந்த மில்களை புனரமைக்க நிதி போன்ற எதையாவது ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுவந்தாரா என்றால் இல்லை. ஏன் ஒன்றிய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க முயற்சித்தாரா? புதுச்சேரிக்கான கடனை தள்ளுபடி செய்ய ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தாரா? இப்படி எதுவும் செய்யாமல் மவுனமாக இருப்பது முதல்வர் பதவிக்கு நல்லதல்ல.

சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் ஒன்றிய அரசு மூலம் நிதி பெற்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் முன்வரலாம். ஆனால் அதைவிடுத்து புதுச்சேரி மற்றும் தமிழக அரசிலில் மூக்கை நுழைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கிறார். அவர் தமிழக பாஜக சார்பில் ராதாபுரம், வேளச்சேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், வடசென்னை, தூத்துக்குடி ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் என நான்கு முறை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர். மக்கள் செல்வாக்கு இழந்தவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கி, புதுவையின் அதிகாரம் தனக்கே என கொக்கறிப்பது ஏன்? ஆளுநராக நீங்கள் வந்த பிறகு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதுச்சேரி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தியுங்கள் அப்போது தெரியும் உங்கள் செல்வாக்கு என்ன என்று. தமிழக மக்கள் தான் புறக்கணித்துவிட்டார்கள். ஆகவே புதுச்சேரி மக்கள் ஒரு மாதிரியாகவும், அரசியல் வாதிகள் ஒரு மாதிரியாகவும் இருப்பதையும், முதல்வரும் நமக்கு சாதகமாகத்தான் உள்ளார் என்று நினைத்து, நீங்கள் புதுச்சேரியில் போட்டியிட ஆசைப்பட்டால் உங்களை எதிர்த்து தலைமையின் அனுமதியோடு திமுக வேட்பாளரை களம் இறக்கி வெற்றி காண்போம். இதை ஆளுநர் அவர்கள் சவாலாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு, பொறுப்புமிக்க ஆளுநராக செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் பல ஆளுநர்கள் புதுச்சேரிக்கு பல்வேறு நன்மைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துச் சென்றுள்ளனர். வெறும் அரசியல் விமர்சனம் செய்து அவப்பெயர் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.