பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு அனுப்பபடுவார்.. எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சு

புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மூலம் பிரதமர் மோடி களைத்தது போல, வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவால் முதலமைச்சர் ரங்கசாமியும் வீட்டுக்கு அனுப்பபடுவார் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்கிப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும் என்றும், ஆளுங்கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். ஆகவே மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகின்றது. அதற்கு தேர்தல் ஆணையம் துணைபோகின்றது என குற்றஞ்சாட்டியும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மூலம் பிரதமர் மோடி களைத்தது போல, வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமியும் பாஜகவினரால் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும், முதலமைச்சர் ரங்கசாமிக்கு எந்த குறிக்கோளும் கிடையாது. மக்கள் பிரச்சினைகள் குறித்து கவலைபடாமல் தனது நாற்காலியை காப்பாற்றிகொள்வதற்காக, பாஜகவினர் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என விட்டுவிட்டார் என தெரிவித்தார்.