பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு புதுச்சேரி கலெக்டர் வல்லவன் துணைபோகிறார்.! திமுக பரபரப்பு குற்றச்சாட்டு – கலெக்டரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றிய அரசின் முடங்கிப்போன திட்டங்களை, தொடர்ந்து செய்து வருவதாக சங்கல்ப யாத்ரா பயணம் மூலம் அரசு அதிகாரிகளைக் கொண்டு பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டு மக்களிடத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், அரசு அதிகாரிகளை இப்பணிக்கு அனுமதித்த மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் புதுச்சேரி மாநில திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அமைப்பாளர் இரா. சிவா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான இரா. சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த அரசுகள் காப்பீடு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துகின்ற நிலையில், ஒன்றிய அரசின் தோல்வி கண்ட ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி, எதுவுமே செய்யாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளுதால் அத்திட்டம் புதுச்சேரியில் முழுமையாக தோல்வி கண்டுள்ளது. இதேபோல், பெருமையாக சொல்லும் விவசாயிகளுக்கான காப்பீடு திட்டமும் புதுச்சேரியில் அவல நிலையில் தான் உள்ளது. புதுச்சேரியில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வந்த காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தை மாற்றி பிரதமர் கல்வீடு கட்டும் திட்டம் கொண்டு வந்ததில் இருந்து விண்ணப்பித்த எவருக்கும் பயணளிக்காமல் அத்திட்டம் சந்தி சிரிக்கிறது. குடிசைமாற்று வாரியத்தில் நடைபெறும் பல குழுப்பங்களால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமா நலவழித்துறை மூலம் இயங்கும் அரசு சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை. மருத்துவ உபகரணங்கள், உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. அவசரத்திற்கு பயன்படுத்தும் 108 ஆம்புலன்ஸ் வசதியில்லை. இப்படிப்பட்ட அவல நிலையில் சுகாதாரத்துறை இருந்து வருகிறது. ஆதிதிராவிட மக்களுக்கு சிறப்புக்கூறு திட்டத்தில் சுமார் ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்தும் எந்த திட்டமும் செயல்படவில்லை. ஆனால் அந்த துறை முழுவதுமே அந்த மக்களுக்கு செய்வதாக பிரச்சாரம் செய்வது ஏமாற்று வித்தையாகும்.

ஒன்றிய அரசின் 100 நாள் வேலை என்பது 20 நாள் வேலையாக முடங்கிக்கிடக்கும் நிலையில், ஊர் ஊராக அதுபற்றி பிரச்சாரம் செய்வது ஏற்புடையதல்ல. 100 நாள் வேலையை நடத்தக்கோரி சட்டமன்றத்திலும், வெளியேயும் திமுக தொடர்ந்து வலியுறுத்தியதால் கொஞ்சமாவது நாட்கள் அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கான முழு தொகையையும் ஒதுக்க முடியாத நிலையில் தான் ஒன்றிய அரசு இருந்து கொண்டு இருக்கிறது. அந்த திட்டமும் தற்போது எதற்காக நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே கிராமங்கள்தோறும் கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இன்றைக்கு தாங்கள் தான் கேஸ் விநியோகம் செய்கிறோம் என்று ஏமாற்றப்படுவதை மக்கள் நன்றாக உணர்ந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் கிராம சாலைகள் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சிபிஎஸ்சி கல்வித் திட்டம் போன்ற அனைத்து திட்டங்களும் தோல்வி கண்டுள்ளன. இதையெல்லாம் தாண்டி, ஒன்றிய அரசு அதிகாரிகள் புதுச்சேரி வணிக வரித்துறை அதிகாரிகள் ஊழல் செய்ததாக கூறி கைது செய்து சென்று 10 நாட்களுக்கு மேல் ஆகியும் முதல்வர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.

இதுபோன்று நடக்காத திட்டங்களை எல்லாம் நடந்ததாக மக்களிடத்தில் பொய் பிரச்சாரம் செய்வதும், அதற்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்துவம், ஆளுநரே நேரிடையாக அந்த பிரச்சார பயணத்தில் பங்கேற்று அதிகாரிகளை வற்புறுத்தி பிரச்சாரம் செய்ய வலியுறுத்துவதும் வன்மையாக கண்டிக்கக்தக்கதாகும்.

தேர்தல் நெருங்குகின்ற இந்த நேரத்தில் தேர்தலை நடத்துகின்ற மாவட்ட ஆட்சியரே இதுபோன்ற ஒரு கட்சியின் தேர்தல் பிரச்சார பயணத்திற்கு துணைபோவது விதிமுறைப்படி ஏற்க முடியாததாகும். அவர் இதுபோன்ற பணியில் இருந்து தன்னை விளக்கிக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சாரங்களில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே, வளர்ச்சி பிரச்சாரம் என்ற பெயரில் பாஜக–வின் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டு மக்களை திசை திருப்புகின்ற இந்த போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக மக்களிடம் நலத்திட்டங்களை செயல்படுத்துகின்ற ஆதிதிராவிட நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, உள்ளாட்சித் துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை இவையெல்லாம் இதில் தொடர்ந்து அதிகமாக ஈடுபடுத்தப்படுவது என்பது அறியாமையில் உள்ள அடித்தளத்து ஏழை மக்களையும், குறிப்பாக பெண்களையும் திசைதிருப்புகின்ற மட்டமான அரசியல் என்பதை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே, இதனை கண்டித்து முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை 23.01.2024 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவிலும், அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை முன்பும் தி.மு.கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம்.

ஆகவே, பாஜக–வின் கொள்ளைப்புற அரசியலுக்கு துணைபோகின்ற மாவட்ட ஆட்சியரை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத்தின் அனைத்து நிலையில் உள்ள பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.