லஞ்ச வழக்கில் சிறையில் உள்ள புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.!

சாலை அமைக்கும் பணிக்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் ஒப்பந்ததாரர் இளமுருகன் ஆகிய மூவரை காரைக்காலில் சி.பி.ஐ., சுற்றி வளைத்து கைது செய்தது. மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 75 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேரும் நீதிமன்ற காவலில் காரைக்கால் கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வழக்கில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகக்கோரியும் காங்கிரஸ் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்ததாரர் இளமுருகன் உள்ளிட்ட மூன்று ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவர்கள் மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.