மாமூல் தர மறுத்த தொழிற்சாலை மீது ரவுடிகள் நாட்டு வெடிகுண்டு வீச்சு – புதுச்சேரியில் பரபரப்பு!

புதுச்சேரியில் மாமூல் கேட்டு தரமறுத்த தொழிற்சாலை மீது ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றுக்கு செல்லும் வழியில் முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி, அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள், கம்பெனியின் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
இதில் ஒரு குண்டு தொழிற்சாலை கூரை மீதும், மற்றொன்று தொழிற்சாலை முன்பக்க சுவற்றின் மீது வீசப்பப்பட்டுளது. பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் கம்பெனியில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
என்ன? நடந்தது என தெரியாமல் அனைவரும் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்து 3 நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வதையும் பார்த்தனர். கம்பெனி மீது வெடிகுண்டு வீசப்பட்ட தகவலறிந்த வில்லியனூர் போலீசார், கம்பெனி உரிமையாளர், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் கம்பெனியில் பல்வேறு இடங்களை சோதானையிட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள மற்றறொரு கம்பெனியில் சிசிடிவி காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மூன்று நபர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதும், கம்பெனி மீது வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி செல்வது பதிவாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் மாமூல் கேட்டு ரவுடிகள், தொழிற்சாலை உரிமையாளர் உமாபதியை தொந்தரவு செய்து வந்துள்ளனர். அவர் மாமூல் தர மறுத்ததால், கம்பெனி உரிமையாளரை மிரட்டும் வகையில் வெடிகுண்டுகளை வீசியுள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள மூன்று பேரை வில்லியனூர் போலீசார் தேடி வருகின்றனர். மாமூல் கேட்டு தரமறுத்ததால், தொழிற்சாலை மீது ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.