புதுச்சேரியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.! டெம்போக்களை நிறுத்தி போராட்டம்…

புதுச்சேரியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் டெம்போ நிறுத்த உரிய இடம் ஒதுக்காத புதுச்சேரி நகராட்சியை கண்டித்து டெம்போ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், உள்ளூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது‌.

புதுச்சேரி நகரப் பகுதிகளில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் டெம்போவை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நகரப் பகுதிகளில் பேருந்துகளைவிட‌ டெம்போக்களே அதிகம் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மறைமலையடிகள் சாலையில் புதியதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நேற்று திறக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதனிடையே புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் டெம்போக்களை நிறுத்துவதற்கு உரிய இடம் ஒதுக்காத புதுச்சேரி நகராட்சியை கண்டித்தும், நிழல் பந்தல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்த தர வலியுறுத்தியும் 50 க்கும் மேற்பட்ட டெம்போக்களை புதிய பேருந்துநிலையம் முன்பு நிறுத்தி டெம்போ ஓட்டுநர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெம்போ‌ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால் உள்ளூர் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மதியம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் டெம்போ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, டெம்போக்களை இயக்கத் தொடங்கினர்.

இதேபோல் பல கோடி செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில், கண்காணிப்பு கேமிரா இல்லை. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதம் நடந்தால் கண்டு பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் ஒரு பகுதியில் தான் கழிவறை வசதி முழுமைப்பெற்றுள்ளது. மற்றொரு பக்கம் கட்டு மான பணி நடந்து வருகிறது. தினமும் 75 ஆயிரம் பேர் வரை வந்து செல்லும் இடத்தில் கழிவறை போதிய அளவில் இல்லாததால் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய கடைகள் ஏதும் இல்லாமல் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கடைகள் ஒன்றுக்கூட இல்லை. இதனால் ஒவ்வொரு தடவையும் அத்தியாவசிய பொருட்களை வாங்க அங்கும் இங்கும் பொதுமக்கள் அலைந்தது பரிதாபமாக இருந்தது.