சட்டமன்ற ஜனநாயக மாண்பையும், மரபையும், விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறி டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய குழு கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி சபாநாயகர் செல்வம், சபாநாயகர் பொறுப்பிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மணவெளி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செல்வம் தற்போது புதுச்சேரி சபாநாயகராக உள்ளார். இவர் சபாநாயகராக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து மரபுகளை மீறி பாஜக கூட்டங்களில் பங்கேற்பது, பாஜக தலைவர்களை பொதுவெளியில் சந்தித்து கட்சி தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவது என செயல்பட்டு வருகிறார். இவரது இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது
டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக தேசிய குழு கூட்டத்தில் சபாநாயகர் செல்வம் பங்கேற்றுள்ளது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சயை ஏற்ப்படுத்தியுள்ளது. இதனிடையே சட்டமன்ற ஜனநாயக மாண்பையும், மரபையும், விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறி டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய குழு கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி சபாநாயகர் செல்வம், சபாநாயகர் பொறுப்பிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தலைவர் செல்வம் டெல்லியில் நடைபெற்ற பாஜக கட்சியின் அகில இந்திய கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவரது இந்த செயல் சட்டப்பேரவை மாண்பிற்கு எதிரானதாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சட்டப்பேரவை வழிநடத்தும் சபாநாயகர் பொறுப்பு என்பது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாதங்களை சீர்படுத்தி சட்டமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களுக்கான மன்றமாக இயங்கச் செய்வதாகும்.
சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் சட்டமன்றத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லாமல் நடுநிலையுடன் செயல்படுவது சட்டமன்றத்தின் மரபாகும். பல்வேறு சட்டமன்ற சபாநாயகர்கள் இந்த அடிப்படையில் தான் செயல்படுகிறார்கள். ஆனால் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு செல்வம் அவர்கள் பாரதிய ஜனதா கட்சி தலைவராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நிழல் முதல்வராகவும் அதிகார மையத்தை தன்னிடம் வைத்துக் கொள்பவராகவும் தொடர்ந்து செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.
இப்போது பகிரங்கமாக டெல்லியில் நடந்த பாஜக கட்சியின் அகில இந்திய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது சட்டமன்ற ஜனநாயக மாண்பையும், மரபையும், விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும். எனவே இதற்காக தார்மீக பொறுப்பேற்று செல்வம் அவர்கள் சட்டமன்ற தலைவர் பொறுப்பிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.