புதுச்சேரியில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்காக கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் தராமல், கடந்த 5 மாதங்களாக முடக்கி வைத்துள்ளதாக சபாநாயகர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற வளாகம் கடற்கரை சாலை அருகில் பாரதி பூங்கா எதிரே சுமார் 87 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. கடந்த 1820-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மருத்துவமனையாக இருந்தது. தொடர்ந்து 1959-ம் ஆண்டில் இருந்து சட்டசபை வளாகமாக செயல்படுகிறது. 200 ஆண்டுகள் பழமையான சட்டமன்ற கட்டிடம் புதுச்சேரியின் 19 பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாகும்.
பழமையான கட்டிடம் என்பதால் மைய கட்டிடம் வலுவிழந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பரந்த நில பரப்பில் தலைமை செயலகத்துடன் இணைந்த சட்டமன்ற வளாகம் அமைக்க கடந்த 2000-ம் ஆண்டு முதலே புதுவை அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 முறைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், நில தேர்வில் சிக்கல் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் 2021-ல் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்த என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணி அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு, புதிய சட்டமன்றம் கட்டுவதற்காக மத்திய அரசின் ஒப்புதல் பெற்றது. அதன்படி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை சதுக்க பகுதியில் 15 ஏக்கரில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் இணைந்த புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளதாகவும், ரூ.400 கோடியில் புதிய சட்டமன்ற வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு ஆரம்பகட்ட அனுமதி அளித்த நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய சட்டமன்றம் கட்டுவதற்காக கோப்பிற்கு அனுமதி அளிக்காமல், கடந்த 5 மாதமாக கிடப்பில் வைத்துள்ளதாக சபாநாயகர் செல்வம் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று புதுச்சேரி சட்டபேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், புதுச்சேரியில் 15 வது சட்டபேரவையின் நான்காவது கூட்டத்தொடரின் 3 வது பகுதி வரும் 22ம் தேதி காலை 9.45 மணிக்கு கூடவுள்ளதாகவும், அன்றைய தினம் அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து பேரவையின் ஒப்புதலை பெறுவார் என்றும், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து புதிய சட்டமன்றம் கட்டிடம் கட்டுவது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தற்போதுள்ள சட்டமன்ற கட்டிடம் மிகவும் வலுவிழந்துள்ளதால், ஆபத்தான நிலையில் தான் உட்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தினந்தோறும் சட்டப்பேரவைக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.
அதனால் புதிய சட்டமன்ற கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அந்த கோப்பிற்கு ஒப்புதல் வழங்காமல், கடந்த
5 மாதகாலமாக கோப்பு ஆளுநர் மாளிகையில் உள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்தில் ஆளுநர் எந்தக்கோப்பும் கிடப்பில் இல்லை என கூறினாரே என்ற கேள்விக்கு இது பற்றி அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சபாநாயகர் பதிலளித்தார்.
புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான கோப்பு ஆளுநர் மாளிகையில் கடந்த 5 மாதமாக நிலுவையில் உள்ளதாக சபாநாயகர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.