புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய லூர்தன்னை ஆலயத்தில், பிரான்ஸ் நாட்டின் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டனர். மேலும் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்தன்னை ஆலயம் 148 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆசியாவிலேயே தமிழர் பண்பாட்டின்படி கிறிஸ்தவ ஆலயமான வில்லியனூர் மாதா கோவில் முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924-ம் ஆண்டு அருட்தந்தை லெஸ்போன் என்பவரால் கட்டப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு, மாதா காட்சி கொடுத்த இடமான மசபியேல் குகையில் உள்ள அற்புத சுனையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது, வில்லியனூர் மாதா திருத்தல குளத்தில் ஆண்டு தோறும் கலக்கப்பட்டு வருகிறது. இந்த புனித நீரை பயன்படுத்தும் பக்தர்கள் பலவிதமான கண் நோய்கள், தோல் வியாதிகள் மற்றும் உடல் நோய்களில் இருந்து குணமாகி வருவதாகவும், வில்லியனூர் மாதா ஆலய குளத்தை தொடர்ச்சியாக 7 சனிக்கிழமைகளில் பக்தியோடு சுற்றி வந்து ஜெபிக்கும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருவதாகவும் ஐதீகம் உண்டு.
இத்தகைய சிறப்பு மிகுந்த வில்லியனூர் மாதா ஆலய குளத்தில் இந்த ஆண்டும் பிரான்ஸ் நாட்டின் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு, லூர்து அன்னையின் சொரூபம் தாங்கிய தெப்பல் உற்சவம் நடைபெற்றது. பின்னர் வயநாடு நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
முன்னதாக கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோனிசாமி தலைமையில்
அருள்நிறை ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சிவா, வில்லியனூர் தூய லூர்து மாதா திருத்தல பங்கு தந்தை ஆல்பர்ட் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.