புதுச்சேரியில் மஞ்சள் ரேஷன் அட்டைக்கும் ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடன் 9 வது நாளான இன்று உறுப்பினர்கள் கேள்வி பதில் நேரத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா, புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை எந்த மருத்துவ மனைகளை ஏற்றுகொள்வதில்லை என்றும், குறிப்பாக மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டை ஏற்றுகொள்வதில்லை என குற்றம்சாட்டினார். மேலும் இதனால் ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை புதுச்சேரியில் சரியான முறையில் அமல்படுத்த முடியவில்லை, இந்த திட்டத்தை சீர்படுத்தி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மஞ்சள் அட்டை உள்ளிட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்றார்.