புதுச்சேரி முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்: கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை.!

ரம்ஜான் பண்டிகையை புதுவை முழுவதும் இஸ்லாமியர்கள் வழக்கமான‌ உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியிலும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் வழக்கமான‌ உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுவை கடற்கரை சாலையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோல் புதுவை எச்.எம் காசிம் சாலை முஹ்ஹிதியா பள்ளி வாசல், தேபேசம்பேட்டை மஸ்ஜிதே நூரானிய்யா பள்ளி வாசல், சாந்தாசாகிப்தெரு அஹமதியா பள்ளி வாசல், டி.எம். நகர் மஸ்ஜிதே அல்ஹமீதியா பள்ளிவாசல், நெல்லித்தோப்பு மஸ்ஜிதே சுல்தானிய்யா பள்ளி வாசல், பெரியக்கடை மஸ்ஜிதே இஸ்லாமியா, ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை தெரு மீராபள்ளிவாசல், முல்லா வீதியில் உள்ள முஹம்மதியா பள்ளி வாசல், சுல்தான்பேட்டை பள்ளிவாசல், காலாப்பட்டு மஸ்ஜிதே இபுராஹிம் பள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் தொழுகை நடைபெற்ற பள்ளி வாசல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.