புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சொந்தமான இடத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6.2 டன் சந்தன கட்டைகள் பறிமுதல்… தமிழக வனத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கியது.!!

புதுச்சேரி மாநில வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6.2 டன் சந்தன மரத்துகள்கள் மற்றும் சந்தன கட்டைகளை தமிழக வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சேலத்தில் பிடிபட்ட கேரள கடத்தல்காரர்கள் அளித்த தகவலின்பேரில் தமிழக வனத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

கேரளாவில் இருந்து சேலம் வழியாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு சந்தன கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, கடந்த 3-ம் தேதி சேலத்தில் வனத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சந்தன கட்டைகள் கடத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து 1.50 டன் எடையுள்ள ரூபாய் 3 கோடி மதிப்பிலான சந்தன கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாய்க்கால் பகுதியில் புதுச்சேரி மாநில வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சந்தன கட்டைகள் கடத்திக் கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் சேலம் உதவி வன பாதுகாவலர் செல்வக்குமரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் இன்று புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாயக்கால் கிராமத்தில் உள்ள அந்த வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 40 கிலோ எடை கொண்ட 156 பைகளில் 6.2 டன் சந்தன துகள்களும், நான்கு சந்தனக்கட்டைகளும் இருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்களும் இல்லாமல் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தன துகள்கள் மற்றும் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் இது தொடர்பாக அந்த நிறுவனத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை சேலத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சொந்தமான இடத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சந்தன துகள்கள் மற்றும் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.