புதுச்சேரியில் ஏப்ரல் மாதமே பள்ளிகள் தொடங்கும்.! அமைச்சர் நமச்யசிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்யசிவாயம்,

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2023-24 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் 11ஆம் வகுப்பிலும் தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இருந்து, சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் மட்டும் தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

புதுச்சேரி காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சார்ந்த 126 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
2024-25 கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கல்வியாண்டு நாட்காட்டியும், அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியத்தின்படி ஜூன் 1 முதல் கல்வியாண்டு தொடங்கப்பட்டு வந்த நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் விதிமுறைகளின்படி கல்வியாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 31, 2025 வரை நடைபெறும் என அமைச்சர் நமச்யசிவாயம் தெரிவித்தார்.