LOAN கட்டல! அதுக்குன்னு இப்பிடியா? புதுச்சேரியில் திருடர்களை போல வங்கி ஊழியர்கள் செய்ததை பாருங்க.!

புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியில், வங்கி லோன் கட்டத் தவறிய பொதுப்பணித்துறை ஊழியரின் இருசக்கர வாகனத்தை, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் போல வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்றது குறித்து வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு பொதுப்பணித்துறை ஊழியர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன், முகமூடி அணிந்த இரு இளைஞர்கள் அந்த இடத்திற்கு வந்து, வாகனத்தின் ஹேண்டில் பாரை பிடித்து சைடு லாக்கை உடைத்து வாகனத்தை எடுத்துச் செல்கிறார்கள். இது அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

பின்னர், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பொதுப்பணித்துறை ஊழியரிடம், தனியார் வங்கி ஊழியர்கள் தொடர்புகொண்டு “லோன் கட்டாததால் வாகனத்தை பறிமுதல் செய்தோம்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் வெளியேறிவிட்டதாகவும், எனவே புகார் எதுவும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வாகனமும் பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, “வாகன உரிமையாளரின் பெயர், முகவரி தெரியாத நிலையில், வாகனத்தை எப்படிக் கிடைத்தவரிடம் ஒப்படைத்தனர்?” என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வங்கி ஊழியர்களிடம் இரண்டாவது சாவி இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் படி, சைடு லாக்கை உடைத்து, முகமூடி அணிந்து நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வங்கி ஊழியர்களின் நடவடிக்கையால் பொதுமக்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த மேலும் விசாரணைகள் தேவைப்படுகின்றன என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.