புதுச்சேரியில் தெரு நாய் கடித்து 5 பேர் காயம்… இரண்டு ஆண்டுகளில் 32,645 பேர் நாய் கடியால் பாதிப்பு.!!

புதுச்சேரியில் தனது குட்டியை சாலை விபத்தில் இழந்த தாய் நாய் இன்று காலை அப்பகுதியில் சென்ற 5 க்கும் மேற்பட்டவர்களை துரத்தி கடித்ததில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதிக்குட்பட்ட சுப்ரமணி கோயில் வீதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் தெரு நாய் ஒன்றின் குட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குட்டி உயிரிழந்தது. அதிலிருந்து தாய் நாய் அப்பகுதியில் வாகனம் சென்றாலோ யாரேனும் நடந்து சென்றாலோ அவர்களை துரத்துவதை வழக்கமாக கொண்ட நிலையில், இன்று காலை அதே பகுதியை சேர்ந்த கர்த்திகேயன், வேல்முருகன் நகரை சேர்ந்த சிவா, டான் பஹதூர், கண்ணன், மீனா உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டவர்களை அந்நாய் கடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையில் மற்றும் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் அந்நாயை நகராட்சி விரைந்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியை பொருத்தவரை கடந்த ஆண்டு மட்டும் 26,113 பேரை நாய்கள் கடித்துள்ளது. இந்தாண்டு இதுவரை 6,532 பேரை குறிப்பாக தெருநாய்கள் கடித்து சிகிச்சைபெற்றுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை.