புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி மற்றும் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர் தொகுதிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சாரம் அவ்வைத் திடலில் நடைபெற்றது. மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, தலைமைக் கழக பேச்சாளர் இலயோலா த. ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, மொழிப்போர் தியாகிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்,
காங்கிரஸ் கட்சிக்கும் மம்தா உள்ளிட்ட கட்சிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் போக போகச்சரியாகிவிடும்.
காங்கிரஸ் எங்களது கூட்டணியில் தான் உள்ளார்கள். ஆனால் சீட் வாங்குவதற்கு கட்சி நடத்தக்கூடாது. தேர்தலில் வேலை செய்ய வேண்டும். இவர்கள் (காங்கிரஸ்) தொகுதியை காட்டி சீட் கேட்பது இல்லை. ஆளைக்காட்டித்தான் சீட் கேட்கின்றார்கள். காங்கிரஸ் பெரிய கட்சித்தான் ஆனால் அதன் வலிமை இழந்துவிட்டது. அதனால்தான் பாஜக ஆட்சி ஆட்டம் போடுகின்றார்கள். ஆனால் அவர்களின் ஆட்டம் திமுகவிடம் எடுபடாது.
புதுச்சேரியில் திமுக ஆட்சி கண்டிப்பாக அமையும். நாராயணசாமி வருத்தப்படக்கூடாது என பேசினார்.