புதுச்சேரியில் சுற்றுலா படகு தீ வைத்து எரிப்பு.. எதிர்கட்சி தலைவர் சிவா, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நேரில் ஆய்வு

புதுச்சேரி பழைய துறைமுக முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள சுற்றுலா படகை நள்ளிரவில் மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சம்பவ இடத்தை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி ஆகியோர் நேரில் பார்வையிட்டு, படகு உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.

புதுச்சேரியில் அரசு அனுமதிபெற்று பழைய துறைமுக பகுதியிலிருந்து தனியார் மூலம் ஏராளமான சுற்றுலாப் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உப்பளம் தொகுதிகுட்பட்ட வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த நிலவழகன் என்ற வாலிபர் ரூபாய் 7 லட்சம் செலவில் சுற்றுலாப் படகு ஒன்றை தயார்செய்து அரசின் அனுமதிக்காக காத்திருந்தார். இந்நிலையில் பழைய துறைமுக முகத்துவார பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலவழகனின் படகை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் படகு முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.

இதுதொடர்பாக படகின் உரிமையாளர் நிலவழகன் அளித்த புகாரின்பேரில், ஒதியன்சாலை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா மற்றும் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி ஆகியோர் தீயில் எரிந்து சேதமான படகை பார்வையிட்டு, படகு உரிமையாளருக்கு ஆறுதல் கூறினர். மேலும் அரசிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர். மேலும் சுற்றுலாப் படகுகள் இயங்கும் பழைய துறைமுக பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சமூக விரோதிகள் கஞ்சா போதையில் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், எனவே இரவு நேரத்தில் அந்த பகுதியில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டுமென சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா கேட்டுகொண்டார்.