நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர். 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, தனக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில் சென்னையில் நடிகர் விஜய்யை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார்.
அதன்பிறகு நடிகர் விஜய், முதலமைச்சர் ரங்கசாமியிடம் தொடர்ந்து பேசி வருகிறார்.
மேலும் நடிகர் விஜய் கட்சி தொடங்கும்போது அதற்கு பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இதனால் ரங்கசாமி – விஜய் இடையே சுமுகமான உறவு இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, கட்சியின் ஆண்டு விழா நாளை மகாபலிபுரத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி தமிழக வெற்றி கழக ஆண்டு விழாவில் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து புதுச்சேரி சட்டசபை அலுவலகத்தில், முதலமைச்சர் ரங்கசாமியிடம் தமிழக வெற்றி கழகஆண்டு விழாவில் பங்கேற்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்கள் மாநாடு நடத்துகிறார்கள். தமிழக வெற்றி கழக கட்சி மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவிக்கிறேன் என பதில் அளித்தார்.