சுய லாபத்திற்காக அதிகாரிகளை மிரட்டும் முதல்வர் ரங்கசாமி – அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு

இது தொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்வதாகக்கூறி முதலமைச்சர் கபடநாடகம் ஆடி வருகிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் புதுச்சேரி மாநில மக்கள் மீது பல்வேறு வரிகளை திணிப்பதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என நாங்கள் கூப்பாடு போட்டாலும் முதலமைச்சரின் காதில் ஏறவில்லை. இதன்பின் கடந்த அக்டோபரில் கூடுதல் கொள்முதல் விலை எனக்கூறி ரூ.38 கோடியை பொதுமக்களிடம் 3 மாத மின்கட்டணமாக வசூலித்தனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி, பல கோடி ரூபாய் ஊழலுக்கு வழி வகுக்கும் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை அவசர கதியில் செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கு வாக்களித்து வஞ்சிக்கப்பட்டு வருவதால் புதுச்சேரி மாநில மக்கள் கடும் கோபத்திலும், வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் சர்வாதிகாரத்தின் தொடர்கதையாக மீண்டும் புதுச்சேரி மாநில மக்கள் மீது மின் கட்டண உயர்வை திணித்துள்ளனர். மின்சார ஒழுங்குமுறை இணை ஆணையத்திடம் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை வீடுகளுக்கு 70 பைசா, வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.1.20 வரை உயர்த்த அனுமதி கோரியுள்ளனர். குடிசை தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் மின் கட்டணமும் கணிசமாக உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத பட்ஜெட்டில் மின்கட்டணம் செலுத்த சுமார் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கூடுதல் சுமை ஏற்படும். ஏழை எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் இந்த மின் கட்டண உயர்வுக்கு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்கள் நலத்திடங்களை புறக்கணிப்பதாக அரசு விழாக்களில் புகார் கூறி, புதுச்சேரி தலைமை செயலர் உட்பட அரசு அதிகாரிகளை மிரட்டி மதுபான ஆலைகளை திறக்கவும், ரெஸ்டோ பார் எனப்படும் கவர்ச்சி நடன பார்களை திறக்கவும் முதலமைச்சர் அனுமதி பெற்றார். தரமற்ற விலையில்லா சைக்கிள்களையும் அதிகாரிகளை மிரட்டி அனுமதிபெற்று, மிகப்பெரும் மோசடியை அரங்கேற்றியுள்ளார். இப்போது சுயலாபத்துக்காக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கு உலகளவில் டெண்டர் வைக்காமல், மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் விரும்பும் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கும்படி புதுச்சேரி தலைமை செயலாளரை கடும் நிர்பந்தம் செய்து வருகிறார்.

சுயலாபத்திற்காக மட்டும் தலைமை செயலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மிரட்டி காரியம் சாதிக்க முடியும் முதலமைச்சரால், ஏன் புதுச்சேரி மாநில மக்கள் பாதிக்கப்படும் மின் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த முடியவில்லை? இந்த மின் கட்டண உயர்வுக்கும் அரசு அதிகாரிகள்தான் காரணம் என முதலமைச்சர் பழிபோட்டாலும் ஆச்சர்யமில்லை.
புதுச்சேரி முதலமைச்சர் இந்த மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தனது திறமையற்ற நிர்வாகத்தை எண்ணி, வெட்கித்தலைகுனிந்து தனது முதலமைச்சர் பதவியை ரங்கசாமி அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.