எழுத்தாளர் பிரபஞ்சனின் 5 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.! நினைவுகளை பகிர்ந்த எழுத்தாளர்கள்

சாகித்ய அகாடமி விருதாளர் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் 5 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் ஏராளமான எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் கலந்துகொண்டு பிரபஞ்சனின் தமிழ் இலக்கிய பயணத்தை நினைவு கூர்ந்தனர்.

சாகித்ய அகாடமி விருதாளரும்,
தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவருமான மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் 5 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம், பிரபஞ்சன் அறக்கட்டளை சார்பில், புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவிஞர் உமா மோகன் வரவேற்புறையாற்றினார் . பாவலர் சீனு மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞர் கலைமாமணி மு. பாலசுப்பிரமணியன், டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் மு. வேடியப்பன், கவிஞர் புதுவை இளவேனில், கவிஞர் சீனு தமிழ்மணி, எழுத்தாளர் அரியநாச்சி உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் கலந்துகொண்டு பிரபஞ்சனின் தமிழ் இலக்கிய பயணம் குறித்து நினைவு கூர்ந்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் ஆர். செந்தில்குமார் கலந்துகொண்டு பிரபஞ்சன் குறித்த ஆய்வு நூல்களுக்காக பேராசிரியர் ராஜ்ஜா மற்றும் கலை இலக்கிய பெருமன்றம் தலைவர் எல்லை.சிவக்குமார் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் 2024 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்சன் விருது பேராசிரியர் பா. ரவிக்குமாருக்கு வழங்கப்பட்டது. இறுதியாக பிரபஞ்சன் அறக்கட்டளை தலைவர் பி.என்.எஸ். பாண்டியன் நன்றி கூறினார். முன்னதாக பிரபஞ்சனின் திரு உருவப்படத்திற்கு எழுத்தாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.