300 ஆங்கில வார்த்தைகளை நான்கு நிமிடத்திலும், 250 ஒத்த ஓசையுடைய சொற்களை இரண்டு நிமிடத்திலும் வாசித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற புதுச்சேரி யு.கே.ஜி மாணவர்கள்

புதுச்சேரியை சேர்ந்த ஆதித்யா மற்றும் கிஷான் என்ற இரண்டு சிறுவர்கள் மூலகுளம் பகுதியில் உள்ள பெட்டிட் செமினார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகின்றனர். இந்த இரண்டு சிறுவர்களுக்கும் சிறுவயது முதலே பார்த்ததை செய்யும் திறன் அதிகம் இருந்ததை உணர்ந்த அவர்களது பெற்றோர்கள் குறுகிய நேரத்தில் அதிக ஆங்கில வார்த்தையை வாசிக்கும் பயிற்சியை முறையாக வழங்கினர்.

இதனையடுத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு, சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பெற பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுவன் ஆதித்யா மிக அதிகமான சொற்களை படிக்கும் முயற்சியாக 300 ஆங்கில வார்த்தைகளை 4 நிமிடம் 9 நொடிகளில் வாசித்தும், இதேபோன்று சிறுவன் கிஷான் குறைந்த நிமிடங்களில் ஆங்கிலத்தில் 250 ஒத்த ஓசையுடைய சொற்களை 2 நிமிடங்கள் 32 வினாடிகளில் வாசித்தும் சாதனை படைத்தனர். சிறுவர்களின் இந்த திறனை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா, எழுத்தாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சக மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.